
- Stock: In Stock
- Model: MAVI514
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிச்சமிட்டதில் இவருடைய பங்களிப்பு மகத்தானது!
இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைகிறது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது? பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம்.
மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம்! சின்னச் சின்ன நுணுக்கங்களாக, சிலிர்க்கவைக்கும் விவரிப்பாக, உணர வேண்டிய நியாயமாக, பதற வேண்டிய இதயமாக இவருடைய கதைகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிற மனது, இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது. ஜஸ்ட், ‘ஐ டூ லவ் யூ’தான்... ஆனால், அதில் எத்தனை பரவசம். அசாத்திய நடையில் மனதை அள்ளும் பெருமைமிகு சிறுகதைத் தொகுப்பு இது!
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274