Menu
Your Cart
Traditional Tanjore Painting & Artworks| Authentication Certificate with Every Painting | For Customization - Pls call @ 9597999274 

சிவகாமியின் சபதம் பாகம் 1

சிவகாமியின் சபதம் பாகம் 1
சிவகாமியின் சபதம் பாகம் 1
Rs250.00
  • Stock: In Stock
  • Model: MATN326

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச் சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம், சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள் என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள் என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின் கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.

மகேந்திர வர்ம பல்லவர், அவர் புதல்வர் நரசிம்ம வர்ம பல்லவர் எனும் மாமல்லர் அவர்களுக்கு முந்தைய தலைமுறையால் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மல்லை எனும் மாமல்லபுரத்தின் பின்னணியோடு நான்கு தலைமுறையினரை ஒட்டி பின்னிப் பிணையப்பட்ட அற்புதமான சரித்திர நவீனம் 'சிவகாமியின் சபதம்'.

 

ஆசிரியரின் உரை


நீல வானத்திலிந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப்
பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு
விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த வங்காளக் குடாக் கடலில்
சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்து கொண்டிருந்தன. கரையோரத்தில்
சின்னஞ்சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக்க விரும்பாதவை போல்
இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து கொண்டிருந்தன.

கடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ரஸிகமணி ஸ்ரீ. டி.
கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் இன்னும் இரு நண்பர்களும் நானும்
இருந்தோம். வேறு மனிதர்களோ பிராணிகளோ கண்ணுக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.

மாமல்லபுரத்துக் கடற்கரை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த
சம்பவம். ரஸிகமணி அவர்கள் வழக்கம்போல் கவிதையைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தார்.

'விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு! - முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!'

என்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார்.

'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த
மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே
மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத்
தோன்றியது. முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து
சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும்
தோன்றியது.

கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன.
கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
சற்றுத் தூரத்தில் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும்
உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த
சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த
பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை
செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கை ஒலிக்க நடனமாடிக்
கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.

ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும்
விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும் கண்ணனும்
கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி
வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே
குடிபுகுந்துவிட்டார்கள்.

இரண்டு தினங்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்தோம். அற்புத சிற்பங்களைத்
தாங்கிய கற்பாறைகளைப் பார்த்தோம். குன்றில் குடைந்தெடுத்த கோயில்களையும்
விமானங்களையும் பார்த்தோம். ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு
சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது. பார்க்கப் பார்க்க வியப்பு
மிகுந்தது; கேட்கக் கேட்கப் பரவசமாயிற்று. கையிலே பிடித்த கல்லுளிகளையே
மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இத்தகைய மகேந்திர
ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைத்தபோது அவர்களைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றியது. அந்தச் சிற்பிகளிடம் தோன்றிய பக்தியினால் தலை
தானாகவே வணங்கிற்று.

'சிவகாமியின் சபதம்' என்னும் பெயர் தாங்கிய இந்த நூலை ஏதேனும் ஒரு வழியிலே
பெற்றுக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அன்பர்கள் 'இது அபாரமான புத்தகம்'
என்று உடனே தீர்மானித்துவிடக்கூடும். ஆயிரத்துக்குமேல் பக்கங்கள் உள்ள
புத்தகம் அல்லவா? அதற்குத் தகுந்த கனமும் இருக்கத் தானே செய்யும்?

இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில்
தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி
அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட
பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என்
அகத்திலிருந்து நீங்கியது.

மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும்
விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என்
நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி
விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.

ஆகா! அந்தப் பழந்தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், பெயருக்கும் புகழுக்கும்
மிக்க ஆசை கொண்டவர்கள் போலும்! என்றென்றும் அழியாத கற்பாறையிலே அல்லவா
தங்களுடைய புகழை அவர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள்! வேண்டுமென்று
செய்தார்களோ, வேண்டாமலே செய்தார்களோ, நினைத்துச் செய்தார்களோ, நினையாமலே
செய்தார்களோ. அவர்கள் செய்து வைத்த காரியங்கள் நீடுழி காலம் அவர்களுடைய
நினைவை நிலைநாட்டுமாறு அமைந்திருக்கின்றன.

பல காலமாகப் பண்டைத் தமிழகத்தின் பெருமையைப் பற்றியும் பண்பாட்டின்
சிறப்பைப்பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன்; படித்துமிருந்தேன்.
ஆனாலும், கேட்டது படித்தது எதுவும் உள்ளத்தில் நன்கு பதியவில்லை!
நம்பிக்கையும் அவ்வளவாக உண்டாகவில்லை.

மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்துக்குச் சென்று கண்ணால் நேரிலே
பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் நமது செந்தமிழ் நாட்டில் இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த
மகா சிற்பிகள் இருந்தார்கள்! அவர்களை ஆதரித்துப் போஷித்து உற்சாகப்படுத்தி
அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த மன்னர்களும் இருந்தார்கள்!

அப்படியென்றால், அந்தக் காலத்தில் தமிழகத்தின் பண்பாடும் சமூக
வாழ்க்கையும் எவ்வளவு மேம்பட்டிருக்கவேண்டும்? அத்தகைய மேம்பாட்டை ஒரு
சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து
அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து
வந்திருக்க வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்க பண்டைத் தமிழ்நாட்டில்
வாழ்ந்த நம் மூதாதையர்களிடம் பக்தியும் மரியாதையும் பொங்கி வளர்ந்தன.

தமிழகத்தில் பழம் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையென்பது
மட்டுமல்ல, இதுவரை உண்மையை ஓரளவு குறைத்துச் சொல்லியே வந்திருக்கிறார்கள்
என்று தோன்றியது.

'கோயில்களும் கோபுரங்களும் குன்றைக் குடைந்தெடுத்த விமானங்களும் பாறைச்
சிற்பங்களும் அந்த நாளைய மன்னர்களின் கொடுங்கோன்மை மூலமாகத் தோன்றியவை',
என்று ஒரு சிலர் கூறியதையும் கேட்டிருந்தேன். அந்தக் கொள்கை முற்றிலும்
அபத்தமானது என்ற முடிவுக்கு வந்தேன். கொடுமையினாலும் பலாத்காரத்தினாலும்
வேறு பல வேலைகளைச் செய்வித்தல் சாத்தியமாயிருக்கலாம். ஆனால், இத்தகைய கலை
அற்புதங்கள் ஒரு நாளும் கொடுமையின் மூலம் உண்டாயிருக்க முடியாது.
கட்டாயப்படுத்தி நிலத்தை உழச் செய்யலாம். துணி நெய்யச் செய்யலாம். ஆனால்
அத்தகைய கட்டாய முறைகளினால் கலை வளர்ந்து விடாது. குழந்தையை அடித்து அழச்
செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடிமேல் அடியடித்து
ஓடச் செய்யலாம்; ஆனால் ஆடச் செய்யமுடியாது.

மாமல்லபுரத்தில் உள்ளது போன்ற சொப்பன சிற்ப லோகத்தைப் பலவந்தத்தின் மூலமாகச் சிருஷ்டி செய்திருக்க முடியாது.

எனவே, எந்த வகையிலே சிந்தித்துப் பார்த்தாலும் பழந்தமிழ் மக்களிடம் என்னுடைய பக்தி பெருகி வளர்வதாயிற்று.

'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' ஆகிய கதைகளை எழுதிவந்த காலத்தில்
இந்தக் காலத்துத் தமிழ் மக்கள் பழந்தமிழ் நாட்டின் பெருமையைத் தெரிந்து
கொள்வதில் எவ்வளவு ஆர்வங்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

'கல்கி' பத்திரிகை தொடங்கிய புதிதில், சில நண்பர்கள் தொடர்கதை எழுதும்படி
கேட்டார்கள். 'ஆகட்டும்; தொடர்கதை எழுதத்தான் போகிறேன்!' என்று
சொல்லிவிட்டு, 'கல்கி'யின் மேனேஜரிடம் என்னுடைய உத்தேசத்தைச் சொன்னேன்.
'கூடவே கூடாது!' என்று சொன்னார் நண்பர் சதாசிவம். 'இப்போதே
காகிதத்துக்குத் திண்டாட்டமாயிருக்கிறது. தொடர்கதை எழுதினால் எப்படிச்
சமாளிப்பது?' என்றார். 'அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். காகிதத்
தேவையைக் குறைக்கக் கூடிய சக்திவாய்ந்த தொடர்கதை எழுதப் போகிறேன்!
தொடர்கதை ஆரம்பித்துச் சில இதழ்களிலேயே தெரிந்துவிடும்!' என்றேன். 'அது
என்ன அவ்வளவு அதிசயமான கதை' என்று கேட்டார். 'தமிழ்நாட்டுச் சரித்திரக்
கதை - 'பார்த்திபன் கனவு' என்று பெயர். தமிழ்நாட்டில் நம்மவர்கள்
இராஜபுத்திரர்களைப் பற்றியும் மொகலாயர்களைப் பற்றியும் சரித்திரக் கதை
எழுதினால் குதூகலத்துடன் படிப்பார்கள். தமிழ்நாட்டுச் சரித்திரம்
தமிழர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆகையால், இந்தத் தொடர் கதையினால்
உங்களுக்கு மிக்க சௌகரியம் ஏற்படும்?' என்றேன்.

நான் கூறியதை நம்பாமல் ஸ்ரீ சதாசிவம் தலையை அசைத்தார்.

அவர் சந்தேகப்பட்டது உறுதியாயிற்று. நான் எண்ணியபடி நடக்கவில்லை.
தமிழ்நாட்டுச் சரித்திரக் கதையில் தமிழ் மக்கள் எவ்வளவு ஆர்வம்
கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

'கல்கி' மானேஜர் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார். பம்பாய் எங்கே, கல்கத்தா
எங்கே, டில்லி எங்கே என்று நாலு திசையிலும் சென்று பத்திரிகைக்குக்
காகிதம் வாங்க வேண்டியதாயிற்று.

'பார்த்திபன் கனவு' முடிந்த பிறகு, மன நிம்மதி பெறலாம் என்று பார்த்தால்
அதற்கு ஆயனரும் சிவகாமியும் இடங் கொடுக்கவில்லை. மாமல்லபுரத்தில் முதன்
முதலில் என் மனக் கண் முன்னால் தோன்றியவர்கள் அவர்களேயாதலால் அவர்களை
அலட்சியம் செய்ய முடியவில்லை. எனவே, 'சிவகாமியின் சபதம்' ஆரம்பமாயிற்று.
ஆனால், இலேசில் முடிகிறதாக இல்லை! ஆகா! பேதை சிவகாமி எளிதில் சபதம் செய்து
விட்டாள். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மாமல்லர் ஒன்பது ஆண்டுகள்
பிரம்மப்பிரயத்தனம் செய்தார். அந்த வரலாற்றை எழுதி முடிப்பதற்கோ எனக்கு
இத்தனை காலம் ஆயிற்று.

வாரப் பத்திரிகையில் தொடர் கதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம்
அல்ல. ஒரு வாரத்தில் வெளியான கதைப் பகுதிகளைப் படித்தபிறகு அடுத்த
பகுதிக்கு ஒரு வாரம் வரையில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். பழைய
நிகழ்ச்சிகளையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டும். இந்தத்
தொல்லைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மேற்படி தொடர் கதைகளை வாராவாரம்
படித்து என்னை ஊக்கப்படுத்தி வந்த பதினாயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும்
ஊக்கமுமே இந்த இரு கதைகளையும் எழுதி முடிப்பதற்கு உறுதுணையாயிருந்தன.

தொடர் கதை படிப்பதற்கு வேண்டிய பொறுமையிருக்கும் என்று எதிர்பார்க்க
முடியாத தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் சிலர் இந்தச் சரித்திரக் கதைகளைப்
படித்து வந்ததாக அறிந்து உற்சாகமடைந்தேன். அவர்களில் ஒருவர் தற்சமயம்
சென்னை மாகாணத்தின் உள்நாட்டு மந்திரி பதவி வகிக்கும் டாக்டர் ப.
சுப்பராயன் அவர்கள். தொடர்கதை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அவர்களைச்
சந்திக்க நேரும் போதெல்லாம் மற்ற விஷயங்களையெல்லாம் விட்டு விட்டு,
'சிவகாமியின் சபதம்' கதையில் சென்ற வாரத்தில் வந்திருக்கும்
நிகழ்ச்சிகளைப் பற்றியும், அடுத்த வாரத்தில் வரலாமென்று ஊகித்த
நிகழ்ச்சிகளைப் பற்றியும் டாக்டர் அவர்கள் பேசுவார்கள்.

அத்தகைய ஊக்கத்தைச் 'சிவகாமியின் சபதம்' முடியும் வரையில் இடைவிடாது
காட்டி வந்ததுடன், இந்த நாவலுக்கு ஓர் அழகிய முன்னுரையும் எழுதி
உதவியதற்காக டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்
பட்டிருக்கிறேன்.

'சிவகாமியின் சபதம்' 'பார்த்திபன் கனவு' ஆகிய இரு நூல்களும் சரித்திரக்
கதைகள் என்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. டாக்டர் ப.
சுப்பராயன் அவர்களும் அவ்விதம் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே,
அதைப்பற்றிச் சில வார்த்தை சொல்ல வேண்டியதாயிற்று. அதாவது, மேற்படி
நூல்களில் சரித்திரம் எவ்வளவு என்று விளக்கி விடுவது அவசியமாயிற்று.

கதாபாத்திரங்களைப்பற்றி முதலில் சொல்ல விரும்புகிறேன். மகேந்திர பல்லவர்,
மாமல்ல நரசிம்மர் இருவரும் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் புகழ்பெற்ற
உண்மையான பாத்திரங்கள், மற்றும் தளபதி பரஞ்சோதியார், வாதாபி புலிகேசி,
இலங்கை மானவன்மன், நெடுமாற பாண்டியன், மங்கையர்கரசி, குலச்சிறையார்
ஆகியவர்கள் சரித்திர பூர்வமானவர்கள். அப்பரும், சம்பந்தரும் சரித்திரப்
பிரசித்தியானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மற்றபடி இந்த இரண்டு சரித்திரக் கதைகளிலுமே வருகிறவர்கள் அனைவரும் கனவிலோ, கற்பனையிலோ, கல் சொன்ன கதைகளிலோ உதயமான பாத்திரங்கள்.

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச்
சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக்
குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய
குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம்,
சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள்
என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த
தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள்
என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின்
கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.

இந்தக் கதைகளிலே வரும் நிகழ்ச்சிகளில், சில முக்கியமான நிகழ்ச்சிகள்
சரித்திர ஆதாரமுடையவை. அவற்றில் முக்கியமானவை: 1. மகேந்திர பல்லவர்
முதலில் சமணராயிருந்து பின்னர் அப்பர் சுவாமிகளின் உபதேசம் பெற்றுச் சைவர்
ஆனது. 2. வாதாபி புலிகேசி மாபெருஞ் சைனியத்துடன் தென்னாட்டின் மீது
படையெடுத்து வந்து காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது. 3. புலிகேசி
கொள்ளிடக்கரை சென்று அங்கே சேர, பாண்டிய, களப்பாள மன்னர்களைச் சந்தித்தது.
4. காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் புலிகேசி திரும்பிச் சென்றது.
5. சளுக்கரின் படையெடுப்புக்குப் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுப் பல்லவ
சைனியம் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றது. 6. வாதாபி நகர் மீது
படையெடுத்த பல்லவ சைனியத்திற்குப் பரஞ்சோதி தளபதியாயிருந்தது. 7. பல்லவ
சைனியம் வாதாபியைக் கைப்பற்றி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கியது. 8. தளபதி
பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிபதி உத்தியோகத்தை விட்டுத் தமது சொந்தக்
கிராமமாகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக
வாழ்க்கை நடத்தியது - ஆகிய இவையெல்லாம் சரித்திர பூர்வமான உண்மைச்
சம்பவங்கள்.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் தென்னாடு கலை வளத்தில் தலைசிறந்து
விளங்கியது என்பது சரித்திரம் ஐயமற அறிவிக்கும் உண்மையாகும். சிற்பம்,
சித்திரம், சங்கீதம், நடனம் ஆகிய அழகுக் கலைகள் எல்லாம் தமிழகத்தில்
அப்போது வளம் பெற்றிருந்தன. இந்தக் கலைகளுள் முக்கியமாகச் சிற்பமும்
சித்திரமும், விந்திய பர்வதத்திலிருந்து இலங்கை வரையில் ஏறக்குறைய ஒரே
விதமாகப் பரவியிருந்தன என்பதும், ஒரே பாணியில் அமைந்திருந்தன என்பதும்
சரித்திர பூர்வமாகத் தெரிய வருகின்றன. அஜந்தாவின் குகை மண்டபங்களிலும்
தமிழகத்தில் இப்போது சிற்றன்ன வாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும்,
இலங்கையில் உள்ள ஸ்ரீகிரி மலையிலும் ஒரே விதமான சித்திரங்கள் - அழியா
வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் -
காணப்படுகின்றன. உலகத்தில் வேறு எங்கேயும் இத்தகைய பண்டையச்
சித்திரங்களைக் காணமுடியாது என்று கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய ஒரே காலத்தில் அஜந்தாவிலும் எல்லோராவிலும் வாதாபியிலும்
கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள நாகார்ஜுன மலையிலும் மாமல்லபுரத்திலும்
குன்றுகளைக் குடைந்து விமானங்கள் அமைக்கும் கலை பரவி மகோன்னத நிலையை
அடைந்திருக்கிறது என்பதையும் சரித்திர ஆராய்ச்சியிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.

மேற்கூறிய சரித்திர உண்மைகளையெல்லாம் இந்த இரண்டு கதைகளிலும் கொண்டுவர
முயன்றதன் பயனாக வாழ்க்கையிலேயே ஒப்பற்ற அநுபவம் ஒன்று எனக்குக்
கிடைத்தது; அதுதான் அஜந்தா யாத்திரை. அஜந்தா சித்திரங்களைப் பற்றிப்
புத்தகங்களில் படித்ததை ஆதாரமாகக் கொண்டே 'சிவகாமியின் சபதம்' எழுதுவதற்கு
ஆரம்பித்தேன். ஆனால், கதையை எழுதிக் கொண்டு போகப் போக, ஆயனருக்குப்
பிடித்தது போன்ற அஜந்தா பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. கதையில்
நேர்முகமாக அஜந்தாவைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால்
அங்குள்ள சித்திரங்களை நேரிலே பார்த்துவிட வேண்டுமென்ற விருப்பமும்
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த விருப்பமும் நிறைவேறுவதற்கு
இறைவன் திருவருள் துணை புரிந்தது.

அஜந்தா யாத்திரை பற்றிய கட்டுரையை இந்தப் புத்தகத்தின் அநுபந்தமாகச்
சேர்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், புத்தகம் ஆயிரம்
பக்கங்களுக்கு மேலே போனதும் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அது
பயணக் கட்டுரை நூலாகத் தனியே பிரசுரமாகிறது.

ரா. கிருஷ்ணமூர்த்தி
'கல்கி'
சென்னை
5-3-1948

Write a review

Note: HTML is not translated!
Bad Good

For International Shipping Charges and Procedures Please check this link,

https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274

Customization - We do take customized order for Tanjore Paintings, Mural Paintings and Wooden Statues - For Details - Call us / Whatsapp us @ +91-9597999274